search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீலாவதி மரணம்"

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு லீலாவதி சென்னையில் பெருங்குடிப் பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

    சென்னை:

    எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகளுமான லீலாவதி (வயது 72) சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது திருமணமாகியிருந்த நிலையிலும் லீலாவதி கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பா எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரக தானம் செய்ய முன் வந்தார்.

    மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தது லீலாவதிதான் என முதலில் எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் சொல்லப்படவில்லை.

    சில நாட்களுக்குப் பின்னர், உடல்நலம் பெற்றுத் திரும்பிய எம்ஜிஆருக்கு, நாளிதழ் ஒன்றின் மூலமே தகவல் தெரிய வந்தது.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு லீலாவதி சென்னையில் பெருங்குடிப் பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு ஜெம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

    அவருடைய ஹேமா முரளி என்ற மகள் மஸ்கட்டில் கணவருடன் வசித்து வருகிறார். மினி நந்தன் என்ற மகள் சென்னையில் வசித்து வருகிறார். லீலாவதியின் உடல் பெருங்குடியில் அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் ஏரிக்கரை மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நம்மை எல்லாம் ஆளாக்கிய அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆறறொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்.ஜி.ஆர். 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து நம் புரட்சித் தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் லீலாவதி அம்மையார். 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இன்று இயற்கை எய்தியதை அறிந்து எம்.ஜி.ஆரின் கோடானு கோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

    அன்பு சகோதரி லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார்-உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இதையும் படியுங்கள்... மழை தொடர்ந்து பெய்வதால் கொளத்தூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    ×